காணும் பொங்கலையொட்டி கல்வராயன்மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்

காணும்பொங்கலையொட்டி கல்வராயன் மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன் மலை ஏழைகளின் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கல்வராயன்மலைதான் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக இந்த மலை உள்ளது. இங்கு பெரியார், கவியம், மேகம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
மேலும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கு வசதியாக படகு குழாமும் உள்ளது. இதனால் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும், படகு சவாரி செய்யவும் கடலூர், விழுப்புரம், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் கார், மற்றும் இரு சக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பொங்கல் விடுமுறை
இந்த நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கல்வராயன் மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்தும், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி நேற்று கல்வராயன்மலைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்தனர். மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றியபடி மலையரசியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
ஏமாற்றம்
பின்னர் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு சென்ற அவர்களை வனத்துறையினர் மறித்து நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் அனுமதி இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பினர். இதனால் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு ஆசையோடு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் வனத்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
Related Tags :
Next Story