அரசின் உத்தரவை மீறி 50 சதவீத இருக்கைக்கு மேல் ரசிகர்கள் அனுமதி


அரசின் உத்தரவை மீறி 50 சதவீத இருக்கைக்கு மேல் ரசிகர்கள் அனுமதி
x
தினத்தந்தி 17 Jan 2021 5:50 AM GMT (Updated: 17 Jan 2021 5:50 AM GMT)

அரசின் உத்தரவை மீறி 50 சதவீத இருக்கைக்கு மேல் ரசிகர்கள் அனுமதி தியேட்டர் உரிமையாளர்களுக்கு தாசில்தார் எச்சரிக்கை.

கடலூர், 

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்', சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்' ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்த படங்கள் வெளியாவதை முன்னிட்டு தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு முதலில் அனுமதி வழங்கியது. ஆனால் கொரோனா கட்டுக்குள் வராததால், சென்னை ஐகோர்ட்டு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அறிவுரையை ஏற்று, இந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது. அதன்பின்னர் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், இதனை மீறும் தியேட்டர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்திருந்தது.

ஆனால் கடலூர் நகரில் உள்ள 4 தியேட்டர்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் மற்றும் கடலூர் தாசில்தாருக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் தாசில்தார் பலராமன், கடலூரில் உள்ள 4 தியேட்டர்களிலும் நேற்று மதியம் அதிரடி சோதனை மேற்கொண்டார்.

அப்போது 2 தியேட்டர்களில் அரசு விதியை மீறி 70 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் பலராமன், 50 சதவீத ரசிகர்களுக்கு மேல் அனுமதி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த 2 தியேட்டர்களின் உரிமையாளர்களையும் எச்சரித்தார். தொடர்ந்து தியேட்டர்களில் எவ்வளவு ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்போது இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story