அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் நாயக்கர் சமூகத்தினர், கோவில் மாடுகளுடன் சிறப்பு வழிபாடு


பொங்கல் விழாவையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் முன்பு தேவராட்டம் ஆடிய நாயக்கர் இன ஆண்களை படத்தில்
x
பொங்கல் விழாவையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் முன்பு தேவராட்டம் ஆடிய நாயக்கர் இன ஆண்களை படத்தில்
தினத்தந்தி 17 Jan 2021 9:58 PM GMT (Updated: 2021-01-18T03:28:40+05:30)

பொங்கல் விழாவை முன்னிட்டு அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் நாயக்கர் சமூகத்தினர் கோவில் மாடுகளுடன் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தேவராட்டம் மற்றும் ஓயிலாட்டம் ஆடினார்கள்.

மாடுகளுக்கு பூஜை
கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட பகுதியில் உள்ள பேரூர், வில்காரன்பட்டி, தேசியமங்கலம் ஆகிய 3 மந்தைகளைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர் இனமக்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து தாங்கள் வளர்க்கும் கோவில் மாடுகளுடன் வழிபடுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் இந்த வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 3 மந்தைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர் இன ஆண்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் கோவில் மாடுகளுக்கு பூஜைகள் செய்து மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து கிராமம், கிராமாக ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தும், சிலர் கோமாளிவேடம் அணிந்தும் தங்கள் ஊர்களில் இருந்து அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரத்துக்கு வந்தனர்.

தேவராட்டம்
ஆண்கள் கையில் குச்சியுடன் மேல்சட்டை அணியாமல் வந்தனர். கோவிலுக்கு வந்த இவர்கள் கோவில் முன்பு தங்கள் மாடுகளை நிற்க வைத்து சந்தனம் பூசி பொட்டு வைத்து ரெத்தினகிரீஸ்வரரை வணங்கி மாடுகளுக்கு மரியாதை செலுத்தினார்கள். இதன்பிறகு நாயக்கர் இனத்தின் ஆண்கள் கோவில் முன்பு கிராமம் கிராமமாக பிரிந்து தங்களின் பாரம்பரிய நடனமான தேவராட்டம் மற்றும் ஒயிலாட்டம் ஆடினார்கள். இந்த நிகழ்ச்சியை குளித்தலை வட்ட பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்திருந்து பார்த்து ரசித்தனர்.

Next Story