திருவாரூர் மாவட்டத்தில், நாளை 232 பள்ளிகள் திறப்பு; தூய்மை பணிகள் தீவிரம்


திருவாரூர் மாவட்டத்தில், நாளை 232 பள்ளிகள் திறப்பு; தூய்மை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 18 Jan 2021 3:58 AM GMT (Updated: 18 Jan 2021 3:58 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 232 பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர், 

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

இதற்காக மாணவர்களின் பெற்றோரிடம் கடந்த 6-ந் தேதி முதல் 3 நாட்கள் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

வழிகாட்டு நெறிமுறைகள்

இதையடுத்து ஒரு வகுப்பில் 25 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக மாத்திரைகள் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தூய்மைகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 232 பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பை சேர்ந்த 29 ஆயிரத்து 463 மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர். முதல் நாளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

ஐ.ஏ.எஸ். அதிகாரி

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றுவதை கண்டறிந்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமித்துள்ளது. மேலும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகளின் பாதுகாப்பு, முன்ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்படுகிறது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Next Story