கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் மனு
கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மருத்துவ பணியாளர்கள்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவ பணியாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாங்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா பிரிவில் கடந்த 15-6-2020 அன்று ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்ந்தோம். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி (சனிக்கிழமை) எவ்வித முன் அறிவிப்பும் இன்றி எங்களை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறினார்கள்.
ஆனால் ஒப்பந்த காலம் பிப்ரவரி மாதம் வரை உள்ளது. மேலும் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் மட்டும் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை.
நிரந்தர பணி
எனினும் எங்களது மருத்துவ பணிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தோம். ஊதியம் வழங்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொரோனா காலத்தில் பணியாற்றிய போது எங்களில் சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு பெரும் கஷ்டங்களை அனுபவித்தோம். கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த சமயத்தில் எங்களை வைத்து வேலை வாங்கிவிட்டு கொரோனா குறைந்ததும் பணிக்கு வரவேண்டாம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
எனவே ஆய்வக நுட்புனர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும். மேலும் நிலுவை ஊதியத்தையும் உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story