மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் அடித்து கொன்றனரா?
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து கொன்று விட்டதாக கூறி கோட்டைப்பட்டினத்தில் மறியல் ேபாராட்டம் நடைபெற்றது. இதனால், மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதேபோல, கடந்த 18-ந் தேதி மெர்சியா (வயது 30), சாம்சன் (28), செந்தில்குமார் (32), நாகராஜ் (52) ஆகிய 4 மீனவர்களும் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து சென்ற கப்பல் மீனவர்கள் படகின் பின்புறம் மோதியதாக கூறப்படுகிறது. இதனால், படகு உடைந்து கடல் நீர் உள்ளே புகுந்தது. இதுகுறித்து வாக்கி-டாக்கி மூலம் சக மீனவர்களுக்கு மெர்சியா தரப்பினர் தகவல் கொடுத்தனர். அவர்களை காப்பாற்ற சக மீனவர்கள் மற்றொரு படகில் கடலுக்கு விரைந்தனர். அப்போது இலங்கை ரோந்து படையினர் அங்கு இருந்ததால் காப்பாற்ற சென்ற மீனவர்கள் கரை திரும்பி தமிழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மெர்சியா உள்ளிட்ட 4 பேரும் கரை திரும்பாததால் அவர்கள் கதி என்ன ஆனது? என்று தெரியாமல் உறவினர்களும், சக மீனவர்களும் தவித்து வந்தனர். அவர்களை தமிழக கடற்படையினர் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கடற்கரையில் சாம்சன், செந்தில்குமார் ஆகிய 2 மீனவர்கள் உடல்களும், நேற்று மற்ற 2 மீனவர்களது உடல்களும் கரை ஒதுங்கின. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள ஒரு நாளிதழில் செய்தி பிரசுரமாகி இருந்தது. அவர்களின் புகைப்படங்களை பார்த்து உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இறந்த மீனவர்கள் உடலில் காயங்கள் இருந்ததால் இலங்கை கடற்படையினர் அவர்களை அடித்து கொன்று விட்டதாக உறவினர்களும், சக மீனவர்களும் குற்றம் சாட்டினர். பின்னர் இந்த சம்பவத்தை கண்டித்தும், இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி மற்றும் அரசங்கரை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களை போலீசார் அங்கேயே நிறுத்தி வைத்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மீன்வளத்துறை துணை இயக்குனர் சர்மிளா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் குமரேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் ஜமுனா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது மீனவர் தரப்பினர், இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட 4 மீனவர்களின் உடல்களையும் தமிழகம் கொண்டு வந்து உடல்கூறு ஆய்வு நடத்த வேண்டும் மற்றும் இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இறந்த மீனவர்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இறந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மூழ்கடிக்கப்பட்ட விசைப்படகிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன் வைத்தனர்.
அதற்கு அதிகாரிகள் தரப்பினர், உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்திடம் தெரிவிக்கப்படும். அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த மீனவர்கள் சம்பந்தமான முழு தகவலும் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
அதன்பேரில், மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும், 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், வருகிற சட்டமன்ற தேர்தலை மீனவர்கள் புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியிலும், மீனவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story