திருச்சியில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; தப்பியோடிய நபர்களுக்கு வலைவீச்சு
திருச்சியில் போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை செய்து வருபவர் வேல்முருகன் (வயது 40). நேற்று இரவு இவர் சங்கிலியாண்டபுரம் பைபாஸ் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர். விஜய் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வேல்முருகன் அவரை பிடிப்பதற்கு முயற்சித்தார்.
அப்போது விஜய் உள்பட 3 பேரும் சேர்ந்து வேல்முருகனின் தலையில் இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கினர். இதில் ரத்தம் சொட்ட சொட்ட வேல்முருகன் சத்தம்போட்டுக்கொண்டே மயங்கிக் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தப்பி ஓடிய 3 பேரையும் பாலக்கரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சங்கிலியாண்டபுரம் பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story