தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம் தருவைகுளத்துக்கு படகுகளை மாற்ற எதிர்ப்பு


தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம் தருவைகுளத்துக்கு படகுகளை மாற்ற எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Jan 2021 5:59 PM GMT (Updated: 22 Jan 2021 5:59 PM GMT)

தூத்துக்குடியில் நேற்று தருவைகுளத்துக்கு படகுகளை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இதில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர்களின் விசைப்படகுகளும் உள்ளன. இந்த நிலையில் அந்த படகுகளை தருவைகுளம் கடற்கரைக்கு மாற்ற, அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அந்த படகுகளை தருவைகுளத்துக்கு மாற்றினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று மீன்பிடி துறைமுக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த படகுகளை உரிமையாளர்கள் சமீபத்தில் தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டு சென்று விட்டனர்.

வேலைநிறுத்தம்

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற படகுகளை தருவைகுளத்துக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. அந்த படகுகளில் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதனால் அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மீன்வளத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) தீபா பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து மீனவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story