நெல்லையில் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்: ‘தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்’ சீமான் பேட்டி + "||" + Nellaiyil Naam Tamil Party Election Consultative Meeting: ‘We will create pure politics in Tamil Nadu’ Seeman interview
நெல்லையில் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்: ‘தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்’ சீமான் பேட்டி
‘தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்’ என்று சீமான் கூறினார்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை ரகுமத்நகரில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ேவட்பாளர்கள் அறிமுகம்
நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. 117 பெண்கள், 117 ஆண்கள் போட்டியிடுகின்றனர்.
முதலில் கட்சி வேட்பாளர்களிடம் பேசி ஊக்கப்படுத்தி வருகிறேன். இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதி, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை கட்சிக்குள் அறிமுகம் செய்து பேசி உள்ளேன்.
அரசியல் மாற்றம்
நாங்கள் ஆட்சி மாற்றம், ஆள் மாற்றம் என்ற கோட்பாட்டை எடுக்காமல், அமைப்பு மாற்றம், அடிப்படை மாற்றம், அரசியல் மாற்றம் என செயல்பட்டு வருகிறோம். ஒட்டுமொத்தமாக தூய அரசியலை இந்த மண்ணில் உருவாக்க நினைக்கிறோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 லட்சம் பேர் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். இது எங்களது நேர்மையான அரசியலுக்கு பணம் வாங்காமல் வாக்களித்து உள்ளனர். இது போன்ற மாற்றம் வரும்.
தமிழ் அமைப்புகள் ஆதரவு
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது வேளாண்மையை அரசு பணியாக்குவோம். தமிழ் அமைப்புகள் நேரடியாக அரசியலுக்கு வராமல், என்னை போன்றவர்களை ஆதரிக்கின்றன. இயக்குனர் களஞ்சியம் உள்ளிட்டோர் தேர்தலை புறக்கணித்தாலும் எங்களை ஆதரிப்பார்கள்.
காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் அமைப்பதை தடுக்க வேண்டும். வாக்குகள் சிதறுவதாக கூறுவது தவறு, என்னை ஆதரிப்பவர்கள் என்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். நான் எத்தனை இடங்களை பிடிப்பேன் என்று இப்போது கூறமுடியாது. அதை மக்கள் சரியாக செய்வார்கள். கச்சத்தீவை மீட்டே ஆக வேண்டும்.
சசிகலா உடல் நலம்
சசிகலா உடல் நலம் பெற்று நல்லமுறையில் வெளியே வரவேண்டும். தனியாக இருந்தவருக்கு எப்படி கொரோனா வந்தது? என்ற சந்தேகம் இருக்கிறது. திடீரென்று காய்ச்சல், கொரோனா என குழப்புவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 4 ஆண்டுகளில் வராத நோய் விடுதலை ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏன் வருகிறது. இந்த சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
வேளாண் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்படும். இதனால் விவசாயிகள் மற்றும் குடிமக்களின் நிலைமை மோசமாகும். இதுகுறித்து மக்களிடம் எடுத்துக்கூறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமார், வெற்றிக்குமரன், குமாயில், கதிர் ராஜேந்திரன், வக்கீல் நயினார், நெல்லை மாவட்ட செயலாளர் கண்ணன், தலைவர் சக்தி பிரபாகரன், நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் அலெக்சாண்டார், செயலாளர் அப்பா குட்டி, பொருளாளர் செங்கோல் ஜாண்சன் மற்றும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.