மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்
உளுந்தூர்பேட்டையில் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.
பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் உளுந்தூர்பேட்டை-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
மேலும் இந்த விழாவில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சட்டம், நீதித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
பிரமாண்ட பந்தல்
முதல்-அமைச்சரின் வருகையையொட்டி உளுந்தூர்பேட்டை பகுதி முழுவதும் கட்சி கொடிகள் மற்றும் மின் விளக்குகள் கட்டி இருப்பதை காண முடிகிறது. மேலும் பொதுக்கூட்டத்துக்காக அம்மா திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலை சுற்றியுள்ள பகுதிகளிலும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பணிகளை குமரகுரு எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ், தலைவர் பார்த்திபன், துணை செயலாளர் பிரபு மற்றும் மாவட்ட பேரவை செயலாளர் ஞானவேல் ஆகியோர் செய்து வருகின்றனர். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உளுந்தூர்பேட்டையில் இருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
2,400 போலீசார் பாதுகாப்பு
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள இருப்பதால் வடக்கு மண்டல போலீ்ஸ் ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் காவல்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் முதல்-அமைச்சர் வந்து செல்லும் பாதைகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story