செங்கல்பட்டு அருகே 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு அருகே ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
ரூ.3 கோடியில் ரெயில்வே சுரங்கப்பாதை
செங்கல்பட்டு அடுத்த கண்டிகையில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் ரெயில் மார்க்கத்தில் சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப்பாதையை கடந்து தான் கண்டிகை, மோசிவாக்கம், ஜானகிபுரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆளில்லாத ரெயில்வே கேட்டை தாண்டி தண்டவாளத்தை கடக்கும் போது அதிகளவிலான விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்களின் குற்றச்சாட்டை அடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தநிலையில் கிடப்பில் போடப்பட்டதால், இவ்வழியாக செல்லும் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளால் இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு அரசு பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
மக்கள் கோரிக்கை
இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும், தவித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையின் காரணமாக புதியதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் பாதசாரிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் விவசாய பொருட்களான நெல் கரும்பு உள்ளிட்ட பொருட்களை செங்கல்பட்டிற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்ல திருக்கழுக்குன்றம் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றி கொண்டு சென்று வருகின்றனர்.
எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story