விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

குன்றத்தூர் அருகே விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், விவசாய நிலங்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நத்தம், குன்றத்தூர் - திருமுடிவாக்கம் செல்லும் சாலையின் ஓரம் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுமக்கள் சிலர் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். தற்போது நிலங்களின் உரிமையாளர்கள் சிலர் நிலங்களை விற்று விட்டனர். அதனை தற்போது வீட்டு மனைகளாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் இதுநாள் வரை விவசாயம் செய்து வந்த தங்களுக்கு இழப்பீட்டுத்தொகை எதுவும் கொடுக்கவில்லை என்று கூறி விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய நிலங்களில் இறங்கி ஆர்ப்பாட்டம்
இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் விவசாயம் செய்யும் வயல்வெளிகளில் இறங்கி கோஷங்கள் எழுப்பினார்கள். அதுமட்டுமன்றி இந்த பகுதியில் பூமிக்கு அடியில் பெட்ரோல் குழாய்கள் செல்வதால் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற கூடாது என்று கூறினர்.
உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story






