காஞ்சீபுரம் மாவட்டத்தில்1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில்1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2021 4:47 AM GMT (Updated: 1 Feb 2021 4:47 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 404 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் சின்ன காஞ்சீபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 806 மையங்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து, 404 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

2 ஆயிரத்து 931 பணியாளர்கள்

இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவி் குழுவினர் என மொத்தம் 2 ஆயிரத்து 931 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 11 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒத்துழைக்க வேண்டும்

எனவே பொதுமக்கள் தவறாமல் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் இ்ந்த முறையும் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனி, நகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதி, காஞ்சீபுரம் நகர நல அலுவலர் முத்து, சின்ன காஞ்சீபுரம் சுகாதார மருத்துவ அலுவலர் பார்த்திபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 52 ஆயிரத்து 72 குழந்தைகளுக்கு 1347 நிலையான மையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 56 மையங்கள் மற்றும் 45 நடமாடும் மையங்கள் மூலமாகவும் வழங்கப்படுகிறது. இந்த பணிக்காக பிற துறைகளை சேர்ந்த 38 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து பெற்று குழந்தைகளின் ஆரோக்கியத்தை் பாதுகாக்கவும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராணி, திருவள்ளூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், மாவட்ட உதவி திட்ட மேலாளர் மோகன், மாவட்ட திட்ட அலுவலர் சைத்தன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதை கலெக்டர் ஜான் லூயிஸ் தொடங்கி வைத்தார். ஆஸ்பத்திரி முதல்வர் சாந்தி மலர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார். 

Next Story