சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வு

சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்ந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இங்கு விளையும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஈரோடு, திருப்பூர், தாராபுரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயமும் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
மேலும் திண்டுக்கல்லில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலம், வெளிநாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.
இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி, சின்ன வெங்காயம் அழுக தொடங்கின. எனவே, முழுமையான விளைச்சல் அடையாத சின்ன வெங்காயம் கூட அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் மழைக்கு அழுகியதால் உள்ளூர் சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்தது. தினமும் 200 டன் அளவுக்கு சந்தைக்கு வந்த சின்ன வெங்காயம், தற்போது 50 டன்னாக குறைந்தது.
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்தது.
இதனால் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.110 வரை விற்பனை ஆனது.
இது மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story