வாத்தலை அருகே நெல் அறுவடை எந்திரத்தின் அடியில் சிக்கி தொழிலாளி பலி
வாத்தலை அருகே நெல் அறுவடை எந்திரத்தின் அடியில் சிக்கி தொழிலாளி பலியானார்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பிச்சன் என்பவருக்கு சொந்தமான நெல் வயலில் கதிர் அறுக்கும் எந்திர வாகனம் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தது. இந்த பணியில் வீரமணிப்பட்டி, ரெட்டியார் தெருவை சேர்ந்த ரெங்கராஜ் மகன் விஜயகுமார் (வயது 43), நடுத்தெருவை சேர்ந்த சங்க மூத்த மகன் சீனிவாசன் (56) ஆகிய 2 பேரும் ஈடுபட்டிருந்தனர்.
வாகனத்தை விஜயகுமார் ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெல் அறுவடை செய்யும் எந்திரம் பழுதடைந்து நின்றது. இதனை சரிபார்ப்பதற்காக சீனிவாசன் எந்திரத்தின் அடியில் சென்று பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எந்திரம் வயலில் இருந்த சேற்றில் ஒரு பக்கமாக இறங்கியது. இதில் எந்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட சீனிவாசன் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story