காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 135 பேர் கைது


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 135 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2021 10:00 PM GMT (Updated: 2 Feb 2021 10:00 PM GMT)

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 135 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, 

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சுமார் 4 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன் பேசினார். இதில் அனைத்து துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 135 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மாலையில்அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story