ரூ.1,500 லஞ்சம் வாங்கிய விழுப்புரம் சமூக நலத்துறை அலுவலர் கைது


ரூ.1,500 லஞ்சம் வாங்கிய விழுப்புரம் சமூக நலத்துறை அலுவலர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2021 11:20 PM GMT (Updated: 2 Feb 2021 11:37 PM GMT)

திருமண நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கென மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வருகிறது. இங்கு திருமண நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிப்பதற்கு லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 53). இவர் தனது மகள் முத்துலட்சுமிக்கு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் நிதி உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 2018-ல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இதற்காக ராமலிங்கம், சின்னசேலத்தில் உள்ள சமூகநல வட்டார விரிவாக்க அலுவலகத்திற்கு கடந்த சில மாதங்களாக சென்று அங்கிருந்த சமூகநல விரிவாக்க அலுவலரான ஜெயலட்சுமியை (54) அணுகி வந்துள்ளார். ஆனால் திருமண நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்து கணினியில் பதிவேற்றம் செய்யாமல் ஜெயலட்சுமி காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமலிங்கம், சின்னசேலத்தில் உள்ள சமூகநல வட்டார விரிவாக்க அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஜெயலட்சுமியை அணுகி தனது மகளுக்கு திருமண நிதி உதவி கிடைக்க வழிவகை செய்து உதவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு திருமண நிதி உதவித்தொகை கிடைக்க வேண்டுமெனில் ரூ.1,500-ஐ லஞ்சமாக தர வேண்டும் என்று ஜெயலட்சுமி கூறியதாக தெரிகிறது. 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராமலிங்கம், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த ஜெயலட்சுமி, பணம் கொடுத்தால்தான் திருமண நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்து கணினியில் பதிவேற்றம் செய்ய முடியும் என்று கறாராக கூறினார். 

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமலிங்கம், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை ராமலிங்கத்திடம் கொடுத்து அதை ஜெயலட்சுமியிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று ராமலிங்கம் எடுத்துக்கொண்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஜெயலட்சுமியிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். 

அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு யுவராஜ், இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் விரைந்து சென்று ஜெயலட்சுமியை மடக்கிப்பிடித்தனர். அதனை தொடர்ந்து ஜெயலட்சுமியை போலீசார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஜெயலட்சுமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தபோது போலீசார், அந்த அலுவலகத்தின் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் தொடர்பு உண்டா? என கதவை பூட்டிக்கொண்டு அதிரடி சோதனை நடத்தினர். அதோடு அலுவலக ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை போலீசார் கைப்பற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. 

Next Story