ஏ.டி.எம்.மில் நிரப்ப எடுத்து சென்ற ரூ.60 லட்சத்துடன் டிரைவர் தலைமறைவு: போலீஸ் தேடும் பணி தீவிரம்
பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப எடுத்து சென்ற ரூ.60 லட்சம் இருந்த வாகனத்துடன் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப எடுத்து சென்ற ரூ.60 லட்சம் இருந்த வாகனத்துடன் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம், வங்கிகளிடம் இருந்து பணத்தை பெற்று, அந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாவலா் மற்றும் டிரைவர், ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.
சுப்பிரமணியநகா் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராஜாஜிநகர், டாக்டர் ராஜ்குமார் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர் சென்றனர். அப்போது வாகனத்தில் டிரைவர் மட்டுமே இருந்தார்.
இந்த நிலையில், ஊழியர்கள் வருவதற்குள் பணம் இருந்த வாகனத்தை டிரைவர் ஓட்டி சென்று விட்டார்.
ஏ.டி.எம். மையத்தில் பணத்தை நிரப்பி விட்டு திரும்பி வந்த ஊழியர்கள், வாகனம் மற்றும் டிரைவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பாதுகாப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வாகனத்தில் ரூ.60 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பணம் மற்றும் வாகனத்துடன் டிரைவர் தலைமறைவானது தெரியவந்தது.
அந்த டிரைவர் பாதுகாப்பு நிறுவனத்தில் சமீபத்தில் தான் வேலைக்கு சேர்ந்ததும், அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story