சேலத்தில் இருமடங்கு பணம் தருவதாக கூறிரூ.26 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது


சேலத்தில் இருமடங்கு பணம் தருவதாக கூறிரூ.26 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2021 4:25 AM IST (Updated: 4 Feb 2021 4:40 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருமடங்கு பணம் தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். 

அதில் அவர் கூறியிருந்ததாவது:-

கன்னங்குறிச்சியை சேர்ந்த ஜெயராமன் (39) என்பவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இருமடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நானும் எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு அவரது நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்தோம். ஆனால் இருமடங்கு பணம் தரவில்லை. இதுவரை ரூ.60 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளார்.

இதையடுத்து கட்டிய பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு அவர் சரியான பதில் தராமல் காலம் கடத்தி வருகிறார். எனவே நிதி நிறுவனம் மூலம் அவர் ரூ.26 லட்சம் மோசடி செய்து உள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயராமனை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story