மின் இணைப்பு வழங்க இடைத்தரகர் மூலம் லஞ்சம்: பேரம் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு


மின் இணைப்பு வழங்க இடைத்தரகர் மூலம் லஞ்சம்: பேரம் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Feb 2021 5:20 AM IST (Updated: 4 Feb 2021 5:29 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மின் இணைப்பு வழங்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பேரம் பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை,

கோவையில் மின் இணைப்பு வழங்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பேரம் பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி தனது கட்டிடத்துக்கு வர்த்தக மின் இணைப்பு பெற மின் உரிம ஒப்பந்ததாரரிடம் சென்றார். அவர் ஆவணங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து ரூ.4,500 கட்டணம் பெற்றார். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த உதவி மின் பொறியாளர் கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார்.

ஆனால் வெகுநாட்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து மின் இணைப்பு வழங்க உதவி மின் பொறியாளருக்கு ரூ.2 ஆயிரம் பணம் தர வேண்டும் என ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். அதன்படி தொழிலாளி பணத்தை ஒப்பந்ததாரரிடம் கொடுத்துள்ளார். 

அதன் பின்னரும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து உதவி மின்பொறியாளரை சந்தித்து மின் இணைப்பு வழங்குமாறு தொழிலாளி வலியுறுத்தியுள்ளார். அப்போது இதுகுறித்து இடைத்தரகர் ஒருவரை சந்தித்து பேசுமாறு அதிகாரி கூறியுள்ளார்.

அதன்படி இடைத்தரகரிடம் தொழிலாளி செல் போனில் பேசியபோது "உதவி மின்பொறியாளருக்கு ரூ.20 ஆயிரமும், லைன்மேன், போர்மேன்களுக்கும் தனியாகவும் பணம் கொடுத்தால் காதும், காதும் வச்சது மாதிரி வேலையை முடிக்கலாம்" என்று 3 நிமிட உரையாடல் நடந்தது.

லஞ்சம் கேட்ட உரையாடலை தொழிலாளி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். லஞ்சம்கேட்ட ஆடியோ தற்போது வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து நகர்ப்புற மின்வாரிய உயர் அதிகாரி கூறும்போது, "மின் இணைப்புக்கு இடைத்தரகர் லஞ்சம் கேட்டது தொடர்பாகவும், இதில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

கோவையில் பல இடங்களில் மின் இணைப்பு, மின் ஒயர் பழுது உள்ளிட்ட பணிகளை செய்ய அலுவலர்கள் சர்வசாதாரணமாக லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகளும், மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட ஆடியோ குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story