சென்னை மாநகராட்சியில் இதுவரை 20 ஆயிரம் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி


சென்னை மாநகராட்சியில் இதுவரை 20 ஆயிரம் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 4 Feb 2021 9:30 AM IST (Updated: 4 Feb 2021 9:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என 20 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், ரிப்பன் மாளிகையில் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி போடுவதற்காக சென்னையில் இதுவரை 1.46 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 20 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

10 ஆயிரம் இலக்கு

சென்னையில் 10-ஆக இருந்த தடுப்பூசி முகாம்கள் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 47 முகாம்கள் செயல்பாட்டில் உள் ளன. இந்த எண்ணிக்கை மேலும் படிப்படியாக உயர்த்தப்படும். அதேபோல், தினசரி சுமார் 1,800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையையும் சுமார் 10 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் அடுத்த 6 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

சென்னையில் சுமார் 10 லட்சம் தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தூதர்களை நியமிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது, துணை கமிஷனர் (சுகாதாரம்) திவ்யதர்ஷினி, மாநகர சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story