புதுப்பேட்டை அருகே தையல்காரர் வீட்டில் ரூ.1¾ லட்சம் நகை-பணம் திருட்டு
புதுப்பேட்டை அருகே தையல்காரர் வீட்டில் ரூ.1¾ லட்சம் நகை-பணம் திருடுப்போனது.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 48). தையல்காரர். இவரது மூத்த மகனுக்கு நேற்று காலை புதுப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதற்காக மணமகன் வீட்டார், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு புதுப்பேட்டையில் உள்ள மண்டபத்துக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் கங்காதரன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கங்காதரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். திருடு்ப்போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.1¾ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மகனின் திருமணத்திற்காக சென்ற வீட்டில் நகை-பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story