குப்பை கூளமாக காட்சியளிக்கும் புறநகர் மின்சார ரெயில்கள் ரெயில்வே நிர்வாகம் பராமரிக்க பயணிகள் கோரிக்கை


குப்பை கூளமாக காட்சியளிக்கும் புறநகர் மின்சார ரெயில்கள் ரெயில்வே நிர்வாகம் பராமரிக்க பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Feb 2021 9:35 AM IST (Updated: 5 Feb 2021 9:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் எந்தவித பராமரிப்பும் இன்றி குப்பைகூளமாக காட்சியளிக்கிறது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ரெயில்வே நிர்வாகம் அதனை பராமரிக்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

சென்னை, 

சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் அலுவலகம் மற்றும் இதர பணிகளுக்காக சென்று வருவதற்கு பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து சேவை, மின்சார ரெயில் சேவையாகதான் இருக்கிறது. செலவும் குறைவு, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரமும் மிச்சமாகும் என்பதால் மின்சார ரெயில் சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் இந்த மின்சார ரெயில் சேவை நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மின்சார ரெயில்கள் கடந்த சில நாட்களாக குப்பைகூளமாக காட்சி அளித்து வருகிறது.

பராமரிப்பு இல்லை

பொதுவாக மின்சார ரெயில்கள் காலை முதல் இரவு வரை ரெயில் சேவைகளை முடித்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்படும். அவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் ரெயில்களை சுத்தம் செய்வதற்கும் பணியாளர்கள் இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மின்சார ரெயில்கள் சில மாதங்களாக இயக்கப்படவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முன்பு இருந்ததுபோல, பராமரிப்பு இல்லாமலேயே தற்போது சில மின்சார ரெயில் பெட்டிகள் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பயணிகள் கோரிக்கை

குறிப்பாக பயணிகள் இருக்கைக்கு கீழே சிற்றுண்டிகளின் கவர்கள், பேப்பர்கள், தூசிகள் என ஏதோ பாழடைந்த பங்களாவில் இருப்பது போன்ற உணர்வை தருவதாகவும் சில பயணிகள் குமுறுகின்றனர். இவ்வாறாக இருக்கும் ரெயில் பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

பராமரிப்பது ரெயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு என்றாலும், ரெயில்களில் குப்பைகளை போடாமல், சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் பயணிகளுக்கும் பங்கு உண்டு என்பதை மின்சார ரெயில்களில் பயணிக்கும் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Next Story