தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3¼ லட்சம் திருட்டு; கொள்ளையர்களிடம் சிக்காமல் 15 பவுன் நகை தப்பியது
மதுரவாயலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரூ.3¼ லட்சத்தை திருடிச்சென்றனர்.
பணம் கொள்ளை
மதுரவாயல், ஓடமா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டின் சாவியை வீட்டிற்கு வெளியே மறைவான இடத்தில் வைத்து விட்டு செல்வது வழக்கம்,
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர். இதையடுத்து சாவியை எடுத்து வீட்டை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பதறியடித்து, சென்று சோதித்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..
போலீஸ் விசாரணைஅதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் விசாரணையில், வீட்டின் சாவியை மறைத்து வைக்கும் இடம் தெரிந்து கொண்ட நபர்கள் யாரேனும் பணத்தை கொள்ளை அடித்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆனால் கொள்ளை சம்பவத்தில் பீரோவின் மற்றொரு பகுதியில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையர்கள் கவனிக்காததால் தப்பியது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் திருடிச்சென்றார்களா? என போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.