பூந்தமல்லி அருகே ரசாயன கலவை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு; தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு


பூந்தமல்லி அருகே ரசாயன கலவை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு; தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 4:16 AM IST (Updated: 20 Feb 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே ரசாயன கலவை ஏற்றி சென்ற லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்துள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு ரசாயனங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் அருகே லாரி சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றுகொண்டிருந்த மற்றொரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ரசாயன கலவை ஏற்றிச்சென்ற லாரி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த டிரைவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், வாகனம் மோதியதில் ரசாயனம் ஏற்றி வந்த பேரல்களில் இருந்து ரசாயனம் கசிய தொடங்கி வாகனத்தில் இருந்து புகை வர ஆரம்பித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் உதவியுடன் சாலையோரம் ஓரம் கட்டினர்.

பின்னர் அசம்பாவிதம் ஏதும் நடக்காத வண்ணம் பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு விபத்து நடந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாற்று வாகனம் கொண்டு வரப்பட்டு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த ரசாயனங்களை வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.உரிய நேரத்தில் வாகனம் அப்புறப்படுத்தப்பட்டதால் ரசாயனம் ஏற்றி விபத்துக்குள்ளான வாகனம் தீப்பிடிக்காமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசாயன கலவை ஏற்றிவந்த வாகனம் எந்த நேரத்திலும் தீ பிடிக்கலாம் என்ற தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story