சென்னை தொழில் அதிபர் வீட்டில் துணிகரம்: ரூ.40 லட்சம் தங்க-வைர நகைகள் கொள்ளை


சென்னை தொழில் அதிபர் வீட்டில் துணிகரம்: ரூ.40 லட்சம் தங்க-வைர நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 22 Feb 2021 6:28 PM IST (Updated: 22 Feb 2021 6:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னை, 

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், பிஷப்கார்டன் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன் (வயது 36). தொழில் அதிபரான இவர், கடந்த 16-ந் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றார். நேற்று முன்தினம் இரவு அவர் சென்னை வந்தார்.

சென்னை வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தன.

தங்கம்-வைர நகைகள் கொள்ளை

பீரோவில் இருந்த தங்க-வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகளையும், ரூ.1 லட்சத்தையும் கொள்ளையர்கள் மூட்டை கட்டி அள்ளிச்சென்று விட்டனர்.இது தொடர்பாக அபிராமபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மயிலாப்பூர் துணை கமிஷனர் சேஷாங்சாய், உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் மூலம் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story