குடும்ப தகராறு: கழுத்தை அறுத்து மனைவி கொலை; கணவன் கைது குழந்தைகளின் கண் எதிரே வெறிச்செயல்


குடும்ப தகராறு: கழுத்தை அறுத்து மனைவி கொலை; கணவன் கைது குழந்தைகளின் கண் எதிரே வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 Feb 2021 8:19 PM IST (Updated: 23 Feb 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே குடும்ப தகராறில் குழந்தைகளின் கண் எதிரே மனைவியின் கழுத்தை அரிவாள்மனையால் அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர் .

உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் யாதவர் தெருவில் வசிப்பவர் ஏழுமலை (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு மோகன் (6) என்ற மகனும், தனுஜா (4), கிரிஜா (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஏழுமலை உப்பு மற்றும் மூங்கில் மரம் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் அவ்வப்போது லாரியும் ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், ஏழுமலை அடிக்கடி தனது செல்போனில் பல பெண்களிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை சசிகலா தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சசிகலாவை ஏழுமலை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஊரப்பாக்கம் அடுத்துள்ள வட்ட பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சசிகலா குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாமியார் வீடுக்கு சென்ற ஏழுமலை, மனைவி சசிகலாவிடம் ‘இனி மேல் எந்த தவறும் செய்ய மாட்டேன்’ என்று கூறி சமாதானப்படுத்தி பெரு நகருக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் ஏழுமலை செல்போனில் பெண்களிடம் பேசியதை பார்த்த சசிகலா செல்போனை பிடுங்கி யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டு சண்டையிட்டுள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை வீட்டிலிருந்த அரிவாள்மனை எடுத்து குழந்தைகள் கண்ணெதிரிலேயே சசிகலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதை கண்ட குழந்தைகள் அதிர்ச்சியில் அலறினர். குழந்தைகள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது சசிகலா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உடனடியாக விரைந்து வந்து விசாரித்தார். மேலும், இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியாவிற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மற்றும் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஏழுமலையை தேடி பிடித்து கைது செய்தனர். அதன்பின்னர், உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தைகள் கண் எதிரே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story