சென்னை ராயபுரத்தில் துணிகரம் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 280 பவுன் நகை கொள்ளை
ராயபுரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 280 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 46). இவர் திருமழிசை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிளா. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்று விட்டு வந்த ஷர்மிளா நகைகளை கழற்றி வீட்டில் படுக்கை அறையில் பெரிய சூட்கேசில் வைத்து பீரோவில் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஷர்மிளா பீரோவை திறந்து சூட்கேசை பார்த்தபோது, அதில் வைத்திருந்த சுமார் 280 பவுன் நகை மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கணவர் ராஜாவுக்கு ஷர்மிளா தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து, அலுவலகத்திலிருந்து ராஜா விரைந்து வந்து பார்த்துவிட்டு சம்பவம் தொடர்பாக ராயபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர்.
மேலும் நகைகள் மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் ராஜா குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் கொள்ளை நடந்திருக்கலாம். எனவும், கதவு, பீரோ எதுவும் உடைக்கப்படாமல் இருப்பதால் ராஜா குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான நபர்கள் யாரேனும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story