கேளம்பாக்கம் அருகே அரிசி ஆலை அதிபர் படுகொலை கள்ளக்காதல் விவகாரமா? போலீசார் விசாரணை


கேளம்பாக்கம் அருகே அரிசி ஆலை அதிபர் படுகொலை கள்ளக்காதல் விவகாரமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 March 2021 6:05 AM GMT (Updated: 3 March 2021 6:05 AM GMT)

கேளம்பாக்கம் அருகே அரிசி ஆலை அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்போரூர், 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த பொன்மார் கிராமம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 45). இவரது மனைவி திருமலை தேவி. இவர்களுக்கு தீபிகா (23) என்ற மகளும், தீபக் (18) என்ற மகனும் உள்ளனர்.

பொன்மார் பஸ்நிலையம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசி ஆலை நடத்தி வந்தார். மேலும் முன்புறம் ஹார்டுவேர்ஸ் கடையும், பின்பக்கம் 2 செல்போன் கோபுரங்கள் அமைத்து அதற்கான வாடகையும் பெற்று வந்தார்.

நேற்று பொன்னப்பன் சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டு்க்கு திரும்பி கொண்டிருந்தார். பொன்மார் பஸ் நிலையம் அருகே சென்றபோது கிறிஸ்தவ தேவாலயம் எதிரே காத்திருந்த மர்மநபர்கள் 4 பேர் பொன்னப்பனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்தனர்.

வெட்டிக்கொலை

கண்ணிமைக்கும் நேரத்தில் பொன்னப்பனின் முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. ஒருவாறு சுதாரித்து கொண்ட பொன்னப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவர்கள் பொன்னப்பனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச்சென்றனர்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அந்த பகுதி மக்கள் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் அரிசி ஆலை உரிமையாளர் பொன்னப்பனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதே பெண்ணிடம் மற்றொருவரும் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதாகவும் இதில் ஏற்பட்ட போட்டியில் பொன்னப்பன் கொலை

செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்று போலீசார் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் யாரென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சியையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story