தனியார் கார் தொழிற்சாலையில் பணி வழங்க கோரி கலெக்டரிடம் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்


தனியார் கார் தொழிற்சாலையில் பணி வழங்க கோரி கலெக்டரிடம் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2021 6:28 AM GMT (Updated: 8 March 2021 6:28 AM GMT)

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நிறுவனத்தில் பணி வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு பலகட்ட போராட்டங்களை கிராமத்தினர் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், வெங்கத்தூர் கண்டிகை, அதிகத்தூர் போன்ற பகுதிகளை சேர்ந்த கிராமத்தினர் தங்களது நிலங்களை அந்த தனியார் தொழிற்சாலைக்கு அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொழிற்சாலையை விற்றுவிட்டது. இதைத்தொடர்ந்து புதிய நிறுவனம் தொழிற்சாலையில் பணிபுரிந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. இந்த நிலையில், மீண்டும் தங்களுக்கு அதே நிறுவனத்தில் பணி வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு பலகட்ட போராட்டங்களை கிராமத்தினர் நடத்தினர்.இதைத்தொடர்ந்து நேற்று தனியார் நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான பணியாளர்கள் கலந்து கொண்டு மீண்டும் அந்த தொழிற்சாலையில் அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில் வருகிற 12-ந் தேதி திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 10 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க போவதாக முடிவு செய்தனர்.


Next Story