தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் சாலை மறியல்


தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 March 2021 5:35 AM IST (Updated: 16 March 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் கப்பல்களை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் கப்பல்களை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.

தனியார் துறைமுகம்

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் மீனவ கிராமத்தை சேர்ந்த 125 குடும்பங்களை தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் ஒன்று துறைமுக விரிவாக்கத்துக்காக கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றி வேறு இடத்தில் குடியிருப்புகள் அமைத்து கொடுத்தது. அதைத்தொடர்ந்து, அந்த தனியார் நிறுவனம் 13 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று கூறி 140 நபர்களுக்கு ஒப்பந்த முறையில் பணி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வரும் 140 தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு கட்டங்களாக வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த மாதம் 11-ந் தேதி திடீரென துறைமுகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில், மார்ச் மாதத்துக்குள் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

சாலை மறியல்

இதையடுத்து, இதுவரையில் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யாததை கண்டித்து நேற்று காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் தலைமையில் மீனவ மக்கள் குடும்பத்துடன் தனியார் கப்பல் கட்டும் துறைமுகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் சில மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று துறைமுகப் பகுதியை முற்றுகையிட்டு நடுக்கடலில் நின்ற 4 கப்பல்கலையும் தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பொன்னேரி வருவாய் துறையினர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் மீஞ்சூர் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


Next Story