காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுதாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோபிநாத், நாம் தமிழர் கட்சி சார்பில் சால்டின் சாமுவேல் உள்பட 4 பேர் தேர்தல் நடத்தும் அலுவலரும், காஞ்சீ புரம் வருவாய் ஆர்.டி.ஓ. வுமான ராஜலட்சுமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வினோத் (பகுஜன் சமாஜ் கட்சி) உள்பட 2 பேர் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துநாதனிடம் மனு தாக்கல் செய்தனர்.உத்திரமேரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் காமாட்சி உள்பட 7 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
ஆலந்தூர்
ஆலந்தூர் தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ.கட்சி வேட்பாளர் முகம்மது தமீம் அன்சாரி மற்றும் சுயேச்சைகள் 5 பேர் உள்பட 7 பேர் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் தொகுதியில் ராஜ்குமார் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்தனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்ய சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்திற்கு கையில் சின்னத்துடன் வந்தார். அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் அவர் வைத்திருந்த சின்னமான டார்ச் லைட்டை பறிமுதல் செய்தனர். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய அவரை உள்ளே அனுமதித்தனர்.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி, அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கோதண்டபாணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் லாவண்யா உள்பட 7 பேர் தேர்தல் அலுவலர் சுப்ரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம் தொகுதி யில் ஒருவர், தாம்பரத்தில் சுயேச்சை ஒருவரும், பல்லாவரத்தில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். செங்கல்பட்டு தொகுதியில் அ.ம.முக. சார்பில் டாக்டர் சதிஷ்குமார் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் ஆர்.டி.ஓ. சுரேஷிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மொத்தம் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story






