தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 92 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு


தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 92 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 20 March 2021 10:57 PM GMT (Updated: 2021-03-21T04:33:17+05:30)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் 92 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின் ஏற்கப்பட்டன.

தர்மபுரி,

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் கடந்த 12-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் பெறப்பட்டன. இந்த வேட்பு  மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. 

அதன் முடிவில் 5 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 92 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. பாலக்கோடு சட்டசபை தொகுதியில் கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க.), பி.கே.முருகன் (தி.மு.க.), விஜயசங்கர் (தே.மு.தி.க.), ராஜசேகர் (மக்கள் நீதி மய்யம்), கலைச்செல்வி (நாம் தமிழர் கட்சி) உள்பட மொத்தம் 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 20 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் ஏ.கோவிந்தசாமி (அ.தி.மு.க), பிரபு ராஜசேகர் (தி.மு.க.), பி.பழனியப்பன் (அ.ம.மு.க.), சீனிவாசன் (மக்கள் நீதி மய்யம்), ரமேஷ் (நாம் தமிழர் கட்சி) வேட்பாளர்கள் உள்பட 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தர்மபுரி சட்டசபை தொகுதியில் தடங்கம் சுப்பிரமணி (தி.மு.க.), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (பா.ம.க.), டி.கே.ராஜேந்திரன் (அ.ம.மு.க.), ஜெயவெங்கடேசன் (மக்கள் நீதி மய்யம்), செந்தில்குமார் (நாம் தமிழர் கட்சி) வேட்பாளர்கள் உள்பட 24 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பென்னாகரம் சட்டசபை தொகுதியில் ஜி.கே. மணி (பா.ம.க.), பி.என்.பி.இன்பசேகரன் (தி.மு.க.), உதயகுமார் (தே.மு.தி.க.), ஷகிலா (மக்கள் நீதி மய்யம்), தமிழழகன் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் உள்பட 18 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 15 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அரூர் (தனி) சட்டசபை தொகுதியில் வே.சம்பத்குமார் (அ.தி.மு.க.), குமார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), ஆர்.ஆர்.முருகன் (அ.ம.மு.க.), கீர்த்தனா (நாம் தமிழர் கட்சி) வேட்பாளர்கள் உள்பட 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 7 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Next Story