பங்குனி திருவிழாவையொட்டி கபாலீசுவரர், கற்பகம்பாள் வெள்ளி வாகனத்தில் மாட வீதிகளில் உலா

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவையொட்டி கபாலீசுவரர் சாமியும், கற்பகம்பாளும் வெள்ளி வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கபாலீசுவரர் வீதி உலா
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வருகிற 25-ந்தேதி தேரோட்டமும், 26-ந்தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும், வருகிற 28-ந்தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அந்தவகையில் நேற்று காலை 8.30 மணிக்கு கபாலீசுவரர் சாமியும், கற்பகம்பாளும் வெள்ளி சூரிய வட்ட வாகனத்தில் எழுந்தருளி கிழக்கு, தெற்கு மாட வீதிகள் வழியாக ராமகிருஷ்ண மடம் சாலை வழியாக மீண்டும் வடக்கு மாட வீதி வழியாக கோவிலை சென்றடைந்தனர்.
மாடவீதிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று இரவு வெள்ளி சந்திர வட்டம், கிளி மற்றும் அன்னவாகனங்களில் சாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் மாலை 6.30 மணிக்கு விடையாற்றி சொற்பொழிவுகளும் நடந்தது.
திருஞானசம்பந்தர் விழா
விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெற்கு மாட வீதியில் உள்ள தெப்பக்குள படித்துறையில் காலை 9 மணி அளவில் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை கமிஷனர் த.காவேரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story