வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார்; தி.மு.க.வினர் சாலை மறியல்


வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார்; தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 March 2021 12:34 AM GMT (Updated: 26 March 2021 12:34 AM GMT)

வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்வதாக கூறி கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பணப்பட்டுவாடா புகார்

சென்னை ஆர்.கே.நகர், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, நேதாஜி நகர், மூப்பனார் நகர், இளைய முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய அ.தி.மு.க.வினர் டோக்கன் வழங்குவதாக கிடைத்த தகவலின்பேரில் தி.மு.க.வினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு இடத்தில் அ.தி.மு.க.வினர் கும்பல் கும்பலாக இருந்தனர். அவர்களை சுற்றிலும் பொதுமக்கள் நின்றிருந்தனர். இதனால் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக கூறி தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதனால் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து தி.மு.க. தரப்பினர் அளித்த புகாரை ஆர்.கே.நகர் போலீசார் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தி.மு.க.வினர் மணலி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் (பொறுப்பு) சாமிநாதன் மற்றும் தேர்தல் அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது உண்மை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.

 


Next Story