ஜெயங்கொண்டம் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரசாரம்


ஜெயங்கொண்டம் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 5:37 AM GMT (Updated: 1 April 2021 5:37 AM GMT)

மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவரும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமாகிய ஸ்ரீதர் வாண்டையார் வாக்கு சேகரித்தார்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவரும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமாகிய ஸ்ரீதர் வாண்டையார் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

 வேட்பாளர் பாலு இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்காக நிச்சயம் பாடுபடுவார். 3 ஆயிரத்து 346 சாலையோரம் இருந்த மதுக்கடைகளை மூட வழக்காடி வெற்றி பெற்றவர். வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு பெற்றுத் தந்ததில் வழக்கறிஞர் பாலுவின் பங்கு அதிகம். இதை வழங்கிய எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும். தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுப்பார். 

காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு மிகச்சிறந்த முதல்வரை தமிழகம் கொண்டிருக்கிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை மற்றும் கட்டிடம் கட்டி தரும் திட்டம் அவர் மீண்டும் முதல்-அமைச்சரானால் தான் நிறைவேறும்.  உலகின் அனைத்து நாடுகளையும் நம் நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரதமர் மோடி. நல்ல பிரதமர், நல்ல முதல்-அமைச்சர். அந்தவகையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினர் வேண்டும். ஆகவே, பாலுவை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

அப்போது அவருடன் ஜெயங்கொண்டம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜாரவி, த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான மாசிலாமணி, பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.எம்.டி. திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் இளையராஜா, பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜாஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கே.ராஜேந்திரன் மற்றும் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story