நாடக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் கடவுள் வேடம் அணிந்து வந்த கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை


நாடக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் கடவுள் வேடம் அணிந்து வந்த கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 13 April 2021 6:23 PM IST (Updated: 13 April 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

நாடக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், கடவுள் வேடம் அணிந்து வந்த கலைஞர்கள் கோரிக்கை விடுத்்தனர்.

திருவாரூர், 

நாடக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்க கோரி மன்னார்குடி இயல் இசை நாடக நடிகர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் செயலாளர் ஜோதிமகாலிங்கம் மற்றும் கலைஞர்கள் கடவுள் வேடமணிந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று மீண்டும் தீவிரமடைந்து பரவி வருவதால், அதை கட்டுபடுத்த அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி கோவில் திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவிழாக்களை மட்டுமே நம்பி தொழிலில் ஈடுபட்டுள்ள நாடக நடிகர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

விதிமுறைகளுடன் அனுமதி

மன்னார்குடி இயல் இசை நாடக நடிகர் சங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். கோடை காலத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் நடைபெறும் திருவிழாவை வைத்தே எங்களின் வாழ்வாதாரம் ஆண்டு முழுவதும் பாதுகாக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முற்றிலும் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பல்வேறு விழாக்களில் வாய்ப்புகள் வந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக நாடக நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனவே இயல் இசை நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய- மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி நாடக நிகழ்ச்சி நடத்த விதிமுறைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். அரசு விதிகளை கடைபிடித்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story