நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு 1050 படுக்கைகள் தயார்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு 1050 படுக்கைகள் தயார் கண்காணிப்பு அலுவலர் தகவல்.
நாகப்பட்டினம்,
நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமினை ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான முனியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக 580 படுக்கை வசதிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக 470 படுக்கை வசதிகளும் ஆக மொத்தம் 1050 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சியை சேர்ந்த அலுவலர்கள் மூலம் முககவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் அவசியம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story