விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் கைது


விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 6:43 PM GMT (Updated: 15 April 2021 6:43 PM GMT)

கணபதிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ராஜாக்கமங்கலம், 
கணபதிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ரூ.50 ஆயிரம் லஞ்சம் 
ராஜாக்கமங்கலம் அருகே ஆத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணஜோதி (வயது 45), விவசாயி. இவர் ஆத்திக்காட்டுவிளை பகுதியில் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை தனது பெயரில் பதிவு செய்ய கணபதிபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு, சார்-பதிவாளராக பணியாற்றி வரும் கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த பனிமய ஜெயசிங்டன் (வயது 50) என்பவர் பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. இதனால், கிருஷ்ண ஜோதி அதிர்ச்சி அடைந்தார்.
சார்-பதிவாளர் கைது 
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனைதொடர்ந்து  சார்-பதிவாளரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ண ஜோதியிடம் கொடுத்து அதை சார்-பதிவாளரிடம் கொடுக்கும்படி கூறினர்.  
 இதனைதொடர்ந்து நேற்று மாலை கிரு‌‌ஷ்ணஜோதி கணபதிபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று சார்-பதிவாளர் பனிமய ஜெயசிங்டனிடம், ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
பணத்தை அவர் பெற்று கொண்டதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்-பதிவாளரை கையும், களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர். 
தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய போது சார்-பதிவாளர் போலீசாரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story