பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி கரம் நீட்ட கொரோனாவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு, மராட்டிய முதல்-மந்திரி வலியுறுத்தல்


பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி கரம் நீட்ட கொரோனாவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு, மராட்டிய முதல்-மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 April 2021 10:19 AM GMT (Updated: 16 April 2021 10:19 AM GMT)

பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி கரம் நீட்ட கொரோனாவை இயற்கை பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று மத்திய அரசை, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

முதல்-மந்திரி கடிதம்
மராட்டியத்தை கொரோனா உயிர்கொல்லி நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. தினம், தினம் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மாநில அரசு 15 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த ஏதுவாக கொரோனாவை இயற்கை பேரிடராக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மத்திய அரசின் அனுமதி தேவை
அனைத்து மாநில பேரிடர் மேலாண்மை சட்டங்களும் மத்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளன.எனவே மாநில பேரிடர் நிவாரண நிதியை தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த மத்திய அரசின் அனுமதி தேவை.தற்போது அதிகப்படியான மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு சொத்து இழப்பு அல்லது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பட்சத்தில் இந்த பேரிடர் நிதியில் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளதால் இதே நோக்கத்திற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்த முதல்-மந்திரி திட்டமிட்டுள்ளார்.

இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்பதால், அந்த அனுமதியை பெறவே முதல்-மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story