தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்றபோது தி.மு.க. பிரமுகர் வீட்டில் 23 பவுன் நகை-பணம் கொள்ளை
அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்றபோது, தி.மு.க. பிரமுகர் வீட்டில் 23 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் குல்மகால் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ரமேஷ்காந்த் (வயது 50). தி.மு.க. பிரமுகரான இவர், திருவலாங்காடு முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆவார். தற்போது திருவள்ளூர் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவருக்கு தேவி (48) என்ற மனைவியும், பாலசுப்பிரமணியன் (24) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
மனைவி தேவி முருகஞ்சேரி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பாலசுப்பிரமணியன் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இந்த நிலையில், கடந்த 7-ந்தேதியன்று ரமேஷ்காந்த்தின் தாயார் காலமானதால், இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர்கள் வீட்டை பூட்டி விட்டு திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ள பழையபனம்பாக்கம் சென்றனர். இதையடுத்து, நேற்று காலை குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
திருட்டு
உடனே பதறியடித்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு சங்கிலி, வளையல், கம்மல், மோதிரம் என 23 பவுன் தங்க நகைகளும், ரூ.60ஆயிரம், 2 லேப்டாப் திருட்டு போனதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டதில், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து திருட்டு நடந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து திருடர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story