கொரோனாவை எதிர்கொள்ள அடுத்த சில வாரங்களில் இந்தியாவுக்கு கூடுதலாக 3½ லட்சம் மருத்துவ பணியாளர்கள் தேவை; பிரபல டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்


கொரோனாவை எதிர்கொள்ள அடுத்த சில வாரங்களில் இந்தியாவுக்கு கூடுதலாக 3½ லட்சம் மருத்துவ பணியாளர்கள் தேவை; பிரபல டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
x
தினத்தந்தி 30 April 2021 5:44 AM IST (Updated: 30 April 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அடுத்த சில வாரங்களில் கூடுதலாக 5 லட்சம் அவசர சிகிச்சை படுக்கைகள், 3½ லட்சம் மருத்துவ பணியாளர்கள் தேவை என்பது உள்ளிட்ட அதிர்ச்சிகரமான தகவல்களை பிரபல டாக்டர் வெளியிட்டு உள்ளார்.

டாக்டர், நர்ஸ் இல்லாமல் உயிரிழப்பு

நாடு கொரோனா 2-வது அலையில் சிக்கி தவித்து வரும் நிலையில் பிரபல அறுவை சிகிச்சை நிபுணரும், நாராயணா ஹெல்த் குழும தலைவருமான டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி புனேயில் நடந்த ஆன்லைன் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கொரோனாவை எதிர்கொள்ள ஏற்படும் சவால்கள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

தற்போது இந்தியாவில் 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அவசர சிகிச்சை (ஐ.சி.யூ.) படுக்கைகள் தான் உள்ளன. இந்த படுக்கைகள் ஏற்கனவே ஓரளவு நிரம்பிவிட்டன. தற்போது நாட்டில் தினந்தோறும் 3.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது 5 லட்சமாக அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை தான் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் இனிமேல் டாக்டர், நர்ஸ் இல்லாமல் நோயாளிகள் உயிரிழப்பது அடுத்த தலைப்பு செய்தியாக வந்துவிடுமோ என்ற அச்சத்தால் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். இது நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

5 லட்சம் படுக்கைகள்

ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்படும் போது, பாதிப்பு ஏற்பட்டு சோதனை செய்யாமல் 5 முதல் 10 பேர் இருப்பார்கள். அப்படியெனில் நாட்டில் தினந்தோறும் 15 முதல் 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். புள்ளி விவரப்படி 5 சதவீத நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைப்பிரிவு படுக்கை தேவைப்படுகிறது. அவர்கள் 10 நாட்கள் படுக்கையை பயன்படுத்துகின்றனர்.

எனவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரிகிறதா?. அடுத்த சில வாரங்களில் நாம் 5 லட்சம் அவசர சிகிச்சை படுக்கைகளை கூடுதலாக உருவாக்க வேண்டும். ஆனால் படுக்கைகள் மட்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போவதில்லை. நமக்கு டாக்டர், நர்ஸ், மருத்துவ பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள். அடுத்த ஒரு ஆண்டுக்கு கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற நமக்கு குறைந்தது 2 லட்சம் நர்சுகள், 1½ லட்சம் டாக்டர்கள் அடுத்த சில வாரங்களில் தேவைப்படுகிறார்கள். தற்போது உள்ள பாதிப்பு அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்கு இருக்கும். அதேபோல நாம் 3-வது அலைக்கும் தயாராக இருக்கவேண்டும்.

நர்சிங், மருத்துவ மாணவர்கள்

நாடு முழுவதும் நர்சிங் 3 மற்றும் 4-வது ஆண்டு மாணவர்கள் 2.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை ஒரு ஆண்டுக்கு கொரோனா சிகிச்சை மையத்தில் பணி அமர்த்தலாம். இதேபோல 1.30 லட்சம் டாக்டர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்யாமல் மேல்படிப்புக்காக நீட் தோ்வுக்கு தயாராகி வருகின்றனர். எனவே நீட் தோ்வை ஆன்லைனில் நடத்தி விரைவில் அவர்களை பணிக்கு திரும்ப வைக்கலாம்.

அதேபோல மருத்துவ மேல்படிப்பு இறுதி தோ்வுக்காக காத்திருக்கும் மாணவர்களையும் கொரோனா மருத்துவ பணியில் ஈடுபடுத்தலாம். வெளிநாடுகளில் மருத்துவம் படித்து தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறாமல் 90 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் சிறந்த 20 ஆயிரம் பேரை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்தலாம். இதை எல்லாம் அடுத்த சில வாரங்களில் செய்து முடித்தால், நம்மால் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். அல்லது மிக, மிக தீவிர அச்சுறுத்தல் நமக்கு உள்ளது.

சோர்ந்து விட்டனர்

ஏனெனில் நோயாளிகளை அவசர சிகிச்சை படுக்கையில் சேர்த்து ஆக்சிஜன் கொடுப்பது மட்டும் அவரது உயிரை காப்பாற்றிவிடாது. தற்போது உள்ள டாக்டர்களும், நர்சுகளும் முதல் அலையின் போது மிகச்சிறப்பாக கொரோனா நோயாளிகளை கவனித்தனர். ஆனால் தற்போது அவர்கள் சோா்ந்துவிட்டனர். பலா் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்ற இணையான மற்றொரு பணிக்குழுவையும் உருவாக்க வேண்டும். அல்லது பிரச்சினை ஏற்படலாம். ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, தேவைப்படும் படுக்கைகளில் எனது கணிப்பு தவறாகலாம். ஆனால் நான் கூறியது சரியென தாமதமாக தெரிந்தால் என்ன ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story