திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடக்கிறது; கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வாயிலாக 33 நடமாடும் வாகனங்களும், 33 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக 6 ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி, திருவேற்காடு நகராட்சி மற்றும் பூந்தமல்லி நகராட்சி களிலும், திருநின்றவூர் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும், அயப்பாக்கம், காட்டுப்பாக்கம் மற்றும் ஈக்காடு ஊராட்சிகளில் என மக்கள்தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
அதிகமான நபர்களுக்கு தடுப்பூசிகள் போட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இலவசமாக நடமாடும் வாகனத்தில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். தடுப்பூசி முதல் தவணை மற்றும் 2-ம் தவணை என 2 தவணைகளாக போட்டு கொள்ளலாம். தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. ஒவ்வொருவரும் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினர் உற்றார் மற்றும் நண்பர்களை காத்து் கொள்வதற்கு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தடுப்பூசி போட வருவோர் தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்பு தடுப்பூசி நடமாடும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.