11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த மும்பை ஆஸ்பத்திரி தீ விபத்தில் 2 பேர் கைது


11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த மும்பை ஆஸ்பத்திரி தீ விபத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 2:13 AM GMT (Updated: 9 May 2021 2:13 AM GMT)

பாண்டுப் வணிக வளாக தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

2 பேர் கைது

மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள டீரிம்ஸ் வணிக வளாகத்தில் கடந்த மாா்ச் 25-ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வணிகவளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சன்ரைஸ் தனியார் ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சம்பவம் நடந்து சுமார் 1½ மாதத்திற்கு பிறகு போலீசார் தீ விபத்திற்கு காரணமான ஹரிஷ் தயாலால் ஜோஷி, ஜார்ஜ் புத்து சேரி ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளனர்.

நாளை வரை போலீஸ் காவல்

இதில் ஹரிஷ் தயாலால் ஜோஷி, பூனா கழகத்தின் உரிமையாளர் ஆவார். வணிக வளாகத்தின் தீ தடுப்பு பாதுகாப்பை சோதனை நடத்துவது அவரது பொறுப்பாகும். ஜார்ஜ் புத்து சேரி, பிரிவிலேஜ் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் தான் வணிக வளாக கட்டிடத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கியவர் ஆவார். அவர் வணிகவளாகத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் வேலை செய்யாத போதும், தடையில்லா சான்றிதழை வாங்கியதாக கூறப்படுகிறது.

2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை நாளை (10-ந் தேதி) வரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டது.


Next Story