முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் மும்பை ஐகோர்ட்டு வேதனை


முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் மும்பை ஐகோர்ட்டு வேதனை
x
தினத்தந்தி 13 May 2021 2:05 PM GMT (Updated: 13 May 2021 2:05 PM GMT)

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என வேதனை தெரிவித்த மும்பை ஐகோர்ட்டு, இது தொடர்பாக 19-ந் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

மும்பை, 

கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தடுப்பூசி போட வர முடியாத மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், நோய்வாய்பட்டவர்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த மாதம் 22-ந் தேதி இந்த திட்டம் குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை அறிவுறுத்தியது.

இருப்பினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ். குல்கர்னி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது.

மூத்த குடிமக்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை பரிசீலிக்குமாறு கூறி 3 வாரங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் மத்திய அரசு இன்னும் தங்களது முடிவை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

வெளிநாடுகளில் ஏற்கனவே வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கி விட்டது. இந்தியாவில் நாம் பல விஷயங்களில் தாமதமாக செயல்படுகிறோம். நமது பணிகள் மிகவும் மெதுவாக நகர்கின்றன.

மூத்த குடிமக்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படும் அரசு ஏன் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக தொடங்கக்கூடாது?

மத்திய அரசு முன்பே தொடங்கி இருந்தால், இந்த நேரம் அவர்களில் பலரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். இதன் காரணமாக சமூகத்தில் மிக முக்கிய நபர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த நமது மூத்த குடிமக்கள் இப்போது உயிரோடு நடமாடி இருப்பார்கள்.

தடுப்பூசி மையத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் வயது முதிர்ந்தவர்கள் காத்து கிடப்பதையும், பலர் சக்கர நாற்காலியில் செல்லும் புகைப்படங்களும் பார்வைக்கு வருகிறது. இது இதயத்தில் பாரத்தை அதிகரிக்கிறது. இதை பார்க்க நன்றாக தெரியவில்லை.

ஏற்கனவே உடலில் பல வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள், தடுப்பூசி மையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக வருகிற 19-ந் தேதிக்குள் தங்கள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story