தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின


தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 17 May 2021 10:55 AM GMT (Updated: 17 May 2021 10:55 AM GMT)

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

நாகப்பட்டினம்,

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2-வது அலை தமிழகத்திலும் மிக வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்னதான் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை.

நாளுக்கு நாள் கொேரானாவின் பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டது.

இதில் மளிகைக்கடை, பலசரக்கு கடைகள், காய்கறிகள், இறைச்சி் கடைகள் ஆகியவை மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டன.

முழு ஊரடங்கு

இந்த கடைகளை தவிர டீக்கடைகள், பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி ரத்து செய்தும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தியும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் நேற்று முன்தினம் காலையிலேயே பொதுமக்கள் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மருந்துக்கடைகள், பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.

மேலும் நாகை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக நாகை நகர் பகுதி, அண்ணா சிலை, புதிய பஸ் நிலையம், வெளிப்பாளையம், கலெக்டர் அலுவலகம், நாகூர் உள்ளிட்ட சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் பறிமுதல்

அப்போது சாலையில் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, விசாரணை நடத்தினர்.. அதில் அத்தியாவசிய தேவைகளை தவிர தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த கிடுக்கிப்பிடியால் வாகன ஓட்டிகள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் நாகை பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், நீலா விதிகள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகை-நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டத்தில் காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததாலும் வெறிச்சோடி காணப்பட்டது.

திருமருகல்

திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, புத்தகரம், வடகரை, கோட்டூர், வவ்வாலடி, திருப்புகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக கோவில்கள், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நேற்று முன்தினமே வாங்கி சேமித்து வைத்துக்கொண்டனர். திருமருகல் ஒன்றிய பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் சந்தைபேட்டை, இருக்கை, காக்கழனி, கச்சனம் செல்லும் சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளான வலிவலம், சாட்டியக்குடி, கொளப்பாடு, கிள்ளுகுடி, வெண்மணி, ஆந்தக்குடி, காக்கழனி நீலப்பாடி, குருக்கத்தி, ஆழியூர், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாகை மாவட்ட எல்லையான கானூர் சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் கடைவீதிகள் மற்றும் கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் சாலைகளில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு தலாரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story