முழு ஊரடங்கு: திருவாரூர் நகரில், மக்கள் நடமாட்டம் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு


முழு ஊரடங்கு: திருவாரூர் நகரில், மக்கள் நடமாட்டம் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 19 May 2021 3:48 PM GMT (Updated: 19 May 2021 3:48 PM GMT)

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருவாரூர் நகரில் மக்கள் நடமாட்டத்தை போலீசார் டிரோன் மூலம் கண்காணித்தனர்.

திருவாரூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அத்தியாவசிய தேவைகள் கருதி மளிகை, காய்கறி கடைகளை மட்டும் காலை 10 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது. 10 மணிக்கு பின்னர் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

டிரோன் மூலம் கண்காணிப்பு

இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ‘டிரோன்’ கேமரா மூலமாக திருவாரூர் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

அப்போது டிரோன் கேமராக தேரோடும் 4 வீதிகளிலும் பறக்க விடப்பட்டது. இதில் தேவையின்றி வெளியில் சுற்றியவர்கள் ்உடனுக்குடன் எச்சரிக்கப்பட்டனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையால் திருவாரூர் கடைவீதி, பனகல் சாலை, தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

Next Story