தஞ்சை மாவட்டத்தில், ஒரு வாரத்தில் 63 பேர் உயிரிழப்பு: பிணவறை நிரம்பியதால் ஸ்டிரெச்சரில் வெளியே வைக்கப்பட்டிருந்த உடல்கள்


தஞ்சை மாவட்டத்தில், ஒரு வாரத்தில் 63 பேர் உயிரிழப்பு: பிணவறை நிரம்பியதால் ஸ்டிரெச்சரில் வெளியே வைக்கப்பட்டிருந்த உடல்கள்
x
தினத்தந்தி 20 May 2021 10:19 PM IST (Updated: 20 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை நிரம்பியதால் பிணவறைக்கு வெளியே ஸ்டிரெச்சரில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பலியானோர் மற்றும் தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாக தஞ்சை மாவட்டத்தில் தினமும் 7 முதல் 11 பேர் வரை பலியாகி வந்தனர்.

63 பேர் பலி

கடந்த 12-ந் தேதி 7 பேரும், 13-ந் தேதி 11 பேரும், 14-ந் தேதி 7 பேரும், 15-ந் தேதி 11 பேரும், 16-ந் தேதி 7 பேரும், 17-ந் தேதி 11 பேரும், 18-ந் தேதி 9 பேரும் என கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 63 பேர் வரை பலியாகி உள்ளனர். தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் 15-க்கும் மேற்பட்ட உடல்கள் இருந்ததால் அங்கு மேற்கொண்டு இறந்தவர்களின் உடல்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் ஸ்டிரெச்சரில் பிணவறைக்கு வெளியே வைக்கப்பட்டன. அதிகாலை முதல் அங்கு பல மணி நேரமாக ஸ்டிரெச்சரில் உடல்கள் இருந்தன.

நிரம்பிய பிணவறை; ஸ்டிரெச்சரில் உடல்கள்

பிணவறையில் பல மாதங்களாக விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் இறந்த அடையாளம் தெரியாத உடல்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் உள்பட பல்வேறு நோய்களாள் இறந்தவர்களின் உடல்களும் வைக்கப்பட்டதால் பிணவறை நிரம்பியது.

இதனால் மேற்கொண்டு உடல்களை உள்ளே வைக்க முடியாததால் பிணவறைக்கு வெளியே ஸ்டிரெச்சரில் 5-க்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டிருந்தது. பல மணி நேரமாக அந்த உடல்கள் அப்படியே ஸ்டிரெச்சரில் இருந்தது.

இந்த நிலையில் பிணவறையில் இருந்த அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டதோடு தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பிணவறைக்கு வெளியே வைக்கப்பட்ட உடல்கள் உள்ளே வைக்கப் பட்டன.

இந்த சம்பவத்தால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ெரும் பரபரப்பு நிலவியது.
1 More update

Next Story