சென்னை சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர் கொள்ளை வழக்கில் அதிரடி கைது பரபரப்பு தகவல்கள்


சென்னை சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர் கொள்ளை வழக்கில் அதிரடி கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 23 May 2021 7:25 AM IST (Updated: 23 May 2021 7:25 AM IST)
t-max-icont-min-icon

சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர், சென்னை பெரியமேட்டில் நடந்த நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை படாளத்தைச் சேர்ந்தவர் சுராஜ் (வயது 49). நகை வியாபாரியான இவர், கடந்த மே மாதம் 5-ந்தேதி அன்று தனது மோட்டார்சைக்கிளில் பெரியமேடு, அல்லிக்குளம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் திடீரென வழிமறித்து, அவர் வைத்திருந்த ரூ.7½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 282 கிராம் தங்க நகைகள், தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சபியுல்லாசின் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கிய குற்றவாளி ரபி

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை மண்ணடியைச் சேர்ந்த ரபி (37) என்பவர் தலைமறைவாகி இருந்தார். அவர் மீது சென்னை சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ந்தேதி அன்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நின்ற ரெயிலில் குண்டு வெடித்து பெண் என்ஜினீயர் ஒருவர் பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் கைதான ரபி, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது கோர்ட்டு வாரண்டு நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் பெரியமேடு கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ரபியை கைது செய்ய கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதற்காக கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது-சிறை

இந்நிலையில் திருவொற்றியூரில் ரபி பதுங்கிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூரில் ரபி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 74 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு கார், மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான ரபிக்கு, நூருதீன், இஸ்மாயில் என்ற வேறு பெயர்களும் உண்டு.

Next Story