45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் மாநகராட்சி கமிஷனர் தகவல்


45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 27 May 2021 5:26 AM IST (Updated: 27 May 2021 5:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மணப்பாக்கம் பாபாஜி ஆசிரமத்தில் 12 ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 50 படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் செய்யப்பட்டு உள்ள வசதிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

அப்போது பாதுகாப்பு மையத்தில் உள்ள படுக்கை வசதிகள், கழிவறை வசதிகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

வரவேற்கத்தக்கது

கொரோனா தடுப்பு பணியில் சமூக நல அமைப்புகள் அரசுடன் இணைந்து செயல்பட முன்வந்து உள்ளன. சென்னை மாநகராட்சி அனுமதி பெற்று தனியார் அமைப்புகள் கொரோனா பாதுகாப்பு மையத்தை தொடங்கலாம்.

மணப்பாக்கத்தில் பாபாஜி ஆசிரமம் 50 படுக்கை வசதியுடன் செயல்பட உள்ளது. நல்ல காற்று வசதியுடனும் உள்ளது. தன்னார்வ அமைப்புகள் மருத்துவ குழுவுடன் கொரோனா பாதுகாப்பு மையத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது.

15 லட்சம் பேர்

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்கள், பால், பத்திரிகை போடுபவர்கள், ஆட்டோ டிரைவர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்துக்கான தடுப்பூசி போதுமான அளவுக்கு வரவில்லை. அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு கோரி வருகிறது. தற்போது ஒரு லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 2 அல்லது 3 நாளில் இவை தீர்ந்து போகும். 18 வயதில் இருந்து 44 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் போட அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தென் சென்னை துணை கமிஷனர் ராஜகோபால் சுக்ரா, மண்டல அலுவலர் சீனிவாசன், செய்ற்பொறியாளர் ராஜசேகர், ஆசிரம நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story